உள்ளூர் செய்திகள்

கருங்கல் மலையில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத் தீ.

கருங்கல் மலையில் திடீர் காட்டுத் தீ

Published On 2023-01-14 09:17 GMT   |   Update On 2023-01-14 09:17 GMT
  • பொதுமக்கள் குளச்சல் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
  • இரவென்றும் பாராமல் அடர்ந்த காட்டுக்குள் சென்று காட்டுத்தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கன்னியாகுமரி:

கருங்கல் அருகேயுள்ள சிந்தன்விளை பகுதியில் உள்ளது கருங்கல் மலை. இம்மலை கப்பி யறை பேரூராட்சி மற்றும் திப்பிரமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பரந்து விரிந்து உள்ளது. இதன் அடிவாரப் பகுதிகளில் சிந்தன்விளை, வாழவிளை, ஓலவிளை, கருக்கி என பல குக்கிராமங்களில் ஏராளமான குடியிருப்புகளும், வழிபாட்டு தலங்களும் உள்ளன. குடியிருப்புகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சிந்தன்விளை பகுதியில் கருங்கல் மலை உச்சியில் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் குளச்சல் பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீணைப்பு வீரர்கள் வருவதற்குள் காட்டுத்தீ மளமளவென பரவத் தொடங்கியது.

தகவலறிந்து வந்த குளச்சல் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து செயல்பட்டு முதலில் காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுத்ததோடு அடர்ந்த காட்டிற்குள் இரவு 10 மணிவரை சுமார் 3 மணி நேரம் போராடி காட்டுத்தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி மக்கள் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பினர். இரவென்றும் பாராமல் அடர்ந்த காட்டுக்குள் சென்று காட்டுத்தீயை அணைத்த தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News