திருவட்டார் ஆதிகேசவ பெருமாள்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் களப பூஜை நாளை தொடங்குகிறது
- ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும்
- பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது.
கன்னியாகுமரி:
108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் முதல் நாள் முதல் 12 நாட்கள் சந்தன களப அபிஷேகம் நடைபெறும் கும்பாபிஷேகத்துக்கு பின்னர் நடக்கும் முதல் களப பூஜை நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது.
இதையொட்டி காலை நிர்மால்ய தரிசனத்துக்கு பின்னர் கோவில் கருவறையில் இருந்து ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகள் ஒற்றைக்கல் மண்டபத்துக்கு எடுத்து வரப்படுகிறது. அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் பிரகாரத்தை 3 முறை சுற்றி வரும் ஸ்ரீபலி பூஜை நடக்கிறது. 10 மணிக்கு மீண்டும் கருவறையில் இருந்து ஒற்றைக்கல் மண்டபத்துக்கு சிலைகள் எடுத்து வரப்படுகிறது.
பின்னர் உதய மார்த்தாண்ட மண்டபத்தில் 12 கலசங்கள் வைத்து தந்திரி கலச பூஜை நடத்துவார். மேலும் பிரம்ப கலசம் எனப்படும் பெரிய கலசத்தில் சந்தன களபம் நிறைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. 12 மணிக்கு ஆதிகேசவப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய அர்ச்சனா மூர்த்தி சிலைகளுக்கு களப அபிஷேகம் நடத்தப்படுகிறது.
பின்னர் பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்படும். இதேபோல் நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை 12 நாட்கள் மதியம் களப அபிஷேகம் நடைபெறுகிறது.
களப பூஜையின் இறுதி நாளான 27-ந்தேதி காலை 10 மணிக்கு 47 கலசங்கள் வைத்து பூஜை நடக்கிறது. பின்னர் மஞ்சள் களப அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து பெருந்திரு அமிர்து பூஜை நடைபெறுகிறது.களப பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், பக்தர்களும் செய்துள்ளனர்.