உள்ளூர் செய்திகள்

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 5 அடி வரை உயர்வு: குடிநீர் வாரிய அதிகாரிகள் தகவல்

Published On 2022-12-04 03:13 GMT   |   Update On 2022-12-04 03:13 GMT
  • கடந்த மாதம் ஏரிகளிலும் உபரிநீர் வெளியேற்றும் அளவுக்கு மழைப்பொழிவும் இருந்தது.
  • தற்போது மழை அளவு குறைந்ததால் ஏரிகளில் நீர் சேமிக்கும் பணியும் நடந்து வருகிறது.

சென்னை :

மக்கள் தொகை அதிகரிப்பு, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் முறையாக பராமரிக்காதது போன்ற காரணத்தால், நிலத்தடியில் போதிய நீர் தங்குவதில்லை. சென்னையை பொறுத்தவரை மணல், களிமண் பாறையால் ஆன அடுக்குகளை கொண்ட நிலப்பரப்பாகும். நிலத்தடி நீரை கணக்கிடுவதற்காக சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நிலத்தடி நீர் அளவுமானிகள் அமைக் கப்பட்டு உள்ளன. இவற்றின் மூலம் நிலத்தடி நீர் இருப்பு நிலவரம் கணக்கிடப்படுகிறது.

தற்போது சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் சேர்த்து 9 ஆயிரத்து 627.15 மில்லியன் கன அடி (9.62 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. போதிய நீர் இருப்பு ஏரிகளில் இருப்பதால், தற்போது சென்னை மாநகர பகுதிகளுக்கு 974 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த மாதம் ஏரிகளிலும் உபரிநீர் வெளியேற்றும் அளவுக்கு மழைப்பொழிவும் இருந்தது. தற்போது மழை அளவு குறைந்ததால் ஏரிகளில் நீர் சேமிக்கும் பணியும் நடந்து வருகிறது.

கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது சென்னை மாநகர பகுதிகளில் 5 அடி வரை நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது. ஆனால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் தற்போது, சென்னை மாநகரின் நிலத்தடி நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை. தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஏரிகளுக்கு வரும் நீரின் அளவு, குடிநீர் வினியோகம் செய்யும் நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேற்கண்ட தகவல்களை, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.

Tags:    

Similar News