உள்ளூர் செய்திகள்

ரெயிலில் மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறிப்பு: மயங்கி கிடந்தவர் காஞ்சிபுரத்தில் மீட்பு

Published On 2023-10-30 08:38 GMT   |   Update On 2023-10-30 08:38 GMT
  • ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
  • கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.

அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.

அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.

அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.

மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.

இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.

மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.

காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News