ஓசூர் அருகே ஏரி நிரம்பி விவசாய நிலங்களில் தேங்கியதால் அழுகி சேதமடைந்த பயிர்களால் விவசாயிகள் வேதனை
- 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.
- நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி பகுதியில் உள்ள விவசாய நிலங்களில்,கீரை வகைகள், முள்ளங்கி,கத்தரிக்காய், பீட்ரூட், வாழை மற்றும் கொத்தமல்லி உள்ளிட்டவிவசாய பயிர்களை விவசாயிகள் விளைவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 2 மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக தாதா ராவ் ஏரியும் முழுவதுமாக நிரம்பியது.
ஆனால், உபரி நீர் வெளியே செல்ல வழியின்றி, சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாய நிலங்களில் 3 அடிக்கு மேல் ஏரி நீர் சூழ்ந்துவிட்டது. 2 மாதங்களாகியும் விளை நிலங்களில் உள்ள தண்ணீர் வற்றவோ, வெளியேறவோ வழி இல்லாமல் விளைநிலங்களில் தேங்கி நிற்பதால் விவசாய பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்து மிகுந்த நஷ்டத்திற்கு தள்ளப்பட்டதாக, அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாற்றுப் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை என்றும், தற்போது இரண்டு மாதங்களாக விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பயிர்கள் மழை நீரில் அழுகி தற்போது அந்த தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன் புழுக்கள் உற்பத்தியாகி வருவதாகவும் இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது எனவும்அப்பகுதி மக்கள், விவசாயிகள் கூறினர்.
மேலும், 25 வருடங்களாக நிரம்பாத ஏரி தற்போது பெய்த மழையினால் நிரம்பியிருப்பது, ஒருபுறம் மகிழ்ச்சி அளித்தாலும் மறுபுறம் ஏரியின் உபரி நீர் வெளியேற வழியின்றி, விவசாய பயிர்களை சூழ்ந்து, விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையை தருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பொதுமக்கள் விவசாயிகள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது.
எனவே இனியாவது மாவட்ட நிர்வாகம், உடனடியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற வழிவகை செய்து, விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.