உள்ளூர் செய்திகள்

அரியலூர் நகர்மன்ற கூட்டம்-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார வாதம்

Published On 2022-06-29 10:11 GMT   |   Update On 2022-06-29 10:11 GMT
  • அரியலூர் நகராட்சி கூட்டத்தில் தீர்மானங்களை விரிவாக விளக்க வேண்டும் என்று வலியுறுத்தி அ.தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
  • பிறப்பு இறப்பு கணக்குகள் தெரிவிக்க வேண்டும், வரவு செலவுகள் பொது நிதியில் எவ்வளவு உள்ளது, வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு மேற்கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினர்

அரியலூர்:

அரியலூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சாந்தி கலைவாணன் தலைமையில், துணை தலைவர் கலியமூர்த்தி முன்னிலையில், நடைபெற்றது. நகராட்சி கமிஷனர் சித்ரா சோனியா, நகராட்சி பொறியாளர் தமயந்தி,

இளநிலை உதவியாளர் செந்தில்குமார், தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இளநிலை உதவியாளர் செந்தில்குமார் தீர்மானங்களை வாசிக்க ஆரம்பித்தார். அவர் தீர்மானங்களை 1, 2, 3 என்று படிக்கும்போதே, அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர் வக்கீல் வெங்கடாஜலபதி எழுந்து தீர்மானங்களை முழுமையாக படிக்க வேண்டும் இப்படி படித்தால் எங்களால் முழுமையாக புரிந்து கொள்ள முடியாது எனக் கூறினார்.

துணைத் தலைவர் கலியமூர்த்தி 53 தீர்மானங்கள் இருக்கிறது முழுவதுமாகப் படித்தால் கால நேரம் அதிகமாகும் எனக் கூறினார். எவ்வளவு நேரம் ஆனாலும் முழுமையாக படிக்க வேண்டுமென அ.தி.மு.க. வெங்கடாஜலபதி தொடர்ந்து வலியுறுத்தினார்.

நகராட்சி நிர்வாகத்தில் பொது நிதி எவ்வளவு கையிருப்பு உள்ளது எனக் கேட்டதற்கு, திமுக உறுப்பினர் புகழேந்தி பொதுநிதி கணக்கெல்லாம் தெரிவிக்கப்பட மாட்டாது என கூறினார்.

அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் நகர்மன்ற கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களையும் முழுமையாக வாசிக்கப்பட வேண்டும், பிறப்பு இறப்பு கணக்குகள் தெரிவிக்க வேண்டும், வரவு செலவுகள் பொது நிதியில் எவ்வளவு உள்ளது, வளர்ச்சிப் பணிகள் எந்த அளவுக்கு மேற்கொள்ளலாம் என தெரிவிக்க வேண்டும்.

வார்டு உறுப்பினர்கள் கேள்விக்கு அதிகாரிகள் பதிலளிக்க வேண்டும் என கூறினார்கள். அதனால் நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது, பின்பு அமைதியான முறையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News