தி.நகரில் கட்டிட பணியில் விபத்து- பள்ளத்தில் விழுந்து வட மாநில வாலிபர் உயிரிழப்பு
- கட்டிடம் கட்டும் பணிக்காக 8 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது.
- 8 அடி பள்ளத்தில் பலகை பொருத்தும் பணிக்காக மண் மீது சரோவர் ஹூசைன் ஏறியுள்ளார்.
சென்னை:
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சரோவர் ஹூசைன் (வயது 20). கட்டிட தொழிலாளி. தி.நகரில் பசுல்லா சாலை வருமான வரித்துறை அதிகாரிகள் குடியிருப்பு எதிரே புதிதாக வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த கட்டிட பணியில் சரோவர் ஹூசைன் ஈடுபட்டு வந்தார். கட்டிடம் கட்டும் பணிக்காக 8 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. அதன் மண் தரையில் குவிக்கப்பட்டு இருந்தது. 8 அடி பள்ளத்தில் பலகை பொருத்தும் பணிக்காக அந்த மண்மீது சரோவர் ஹூசைன் ஏறியுள்ளார். இதில் மண் சரிந்து அவர் 8 அடி பள்ளத்தில் விழுந்தார். இதில் அவருக்கு முகத்திலும், மார்பிலும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மற்ற தொழிலாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சரோவர் ஹூசைன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போலீசார் கட்டுமான நிறுவன அதிபர் அருண்பாரதி, என்ஜினீயர் தயாநிதி, மேஸ்திரி பழனிவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.