உள்ளூர் செய்திகள்

 கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.  

40 குடும்பத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா

Published On 2023-06-27 10:11 GMT   |   Update On 2023-06-27 10:11 GMT
  • மின்சாரம் இல்லாததால், இருளில் சென்ற சிறுவன், பாம்பு கடித்து இறந்துள்ளான்.
  • அதிகாரிகள் மெத்தனத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி தாலுகா ஜம்புகுட்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பழனி ஆண்டவர் நகர் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளி குழந்தைகளுடன் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

போச்சம்பள்ளி அடுத்த பழனி ஆண்டவர் நகரில், 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு, மின்சாரம், பட்டா, சாதி சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு, கடந்த, 2005-ம் ஆண்டு முதல் போராடி வருகிறோம். இது குறித்து அனைத்து அலுவலகங்கள் முதல் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு வரை மனு அளித்துள்ளோம்.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 12-ந் தேதி சென்னை தலைமை செயலகத்துக்கே சென்று மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால், இருளில் சென்ற சிறுவன், பாம்பு கடித்து இறந்துள்ளான். அதன்பின்னரும் எங்கள் மீது யாரும் கருணை காட்டவில்லை. எனவே அதிகாரிகள் மெத்தனத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட தலைமையிடத்து துணை தாசில்தார் சகாதேவன் பேச்சுவார்த்தை நடத்தினார். இன்னும் ஒரு மாதத்திற்குள், உங்கள் மனுக்களுக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News