உள்ளூர் செய்திகள்
பா.ஜனதா சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் கவுரவிப்பு
பா.ஜனதா பட்டியல் அணி சார்பில் துப்புரவு தொழிலாளர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடி தலைமையிலான பாரதீய ஜனதா ஆட்சியின் 8 ஆண்டு கால சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் 10 நாள் தொடர் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
புதுவை பாரதீய ஜனதா கட்சி மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் நிகழ்ச்சியை நடத்தி வரு–கிறது. அதன்படி பாரதீய ஜனதா பட்டியல் அணி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி உப்பளம் விளையாட்டு மைதானம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன் மாலை அணிவித்து நிகழ்ச்சியை தொடங்கினார்.இதில், பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், செல்வகணபதி எம்.பி., அசோக் பாபு எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பேசும் போது, பிரதமர் மோடி கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறார். கொரோனா காலகட்டங்களில் துப்புரவு பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்தியது உள்ளிட்ட பாரதீய ஜனதா ஆட்சியின் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறினார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு டிபன் பாக்ஸ் வழங்கப்பட்டது. மேலும் அவர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் பாரதீய ஜனதா மாநிலத் துணைத் தலைவர்கள் செல்வம், ரவிச்சந்திரன், மாநில விவசாய அணி தலைவர் புகழேந்தி, தேசிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், உப்பளம் தொகுதி பாரதீய ஜனதா பொறுப்பாளர் வெற்றிச்செல்வம், நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், மாநில பிரச்சார பிரிவு அமைப்பாளர் ரவி, மாநில பட்டியல் அணி பொருளாளர் சிவபெருமான், சமூக வலைதள அமைப்பாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.