உள்ளூர் செய்திகள்
காயத்ரி-பிரகாஷ்

ரூ.80 லட்சம் கடன்- வாரம் தோறும் 9 பேருக்கு வட்டி கொடுத்ததால் தற்கொலை செய்த ஐ.டி.ஊழியர்

Published On 2022-05-30 05:02 GMT   |   Update On 2022-05-30 05:02 GMT
பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் குடும்பத்தினை கொலை செய்து விட்டு தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
தாம்பரம்:

பல்லாவரத்தை அடுத்த பொழிச்சலூர் வெங்கடேஷ்வரா நகரைச் சேர்ந்தவர் பிரகாஷ் (வயது41). சாப்ட்வேர் என்ஜினீயர்.

இவரது மனைவி காயத்ரி (39). வீட்டின் அருகே உள்ள வடிவேல் தெருவில் மருந்து கடை நடத்தி வந்தார். மேலும் பொழிச்சலூர் மண்டல பா.ஜனதா மகளிர் அணி செயலாளராகவும் இருந்தார். இவர்களது மகள் நித்யஸ்ரீ (13), மகன் ஹரிகிருஷ்ணன்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பிரகாஷ், மரம் அறுக்கும் எந்திர ரம்பத்தால் தனது மனைவி, மகள், மகன் ஆகியோரை கொடூரமாக கழுத்தை அறுத்து கொன்று விட்டு பின்னர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த 19-ந்தேதி ஆன்லைனில் பிரகாஷ் ரம்பத்தை வாங்கி வைத்து இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது.

அவர்கள் தங்களது திருமண நாளில் இந்த பரிதாப முடிவை எடுத்துள்ளனர். இறுதிநாளில் அவர்கள் சந்தோஷமாக தியேட்டருக்கு சென்று படம் பார்த்து உள்ளனர். பின்னர் கடற்கரை, ஓட்டலுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்ததும் மனைவி உள்பட 3 பேரையும் கொன்று விட்டு பிரகாஷ் தற்கொலை செய்து உள்ளார். கழுத்தை அறுக்கும் முன்பு வலி தெரியாமல் இருப்பதற்காக மயக்க மருந்து கலந்து கொடுத்து இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரகாசின் இந்த கொடூர முடிவுக்கு கடன் தொல்லையே முக்கிய காரணம் என்று தெரிகிறது. அவர் வீடு கட்ட ரூ.27 லட்சம் வரை கடன் வாங்கி உள்ளார்.

மேலும் கார் வாங்கவும், மனைவியின் மருந்து கடையில் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை நடத்தவும் கடன் வாங்கி இருந்தார். பிரகாஷ் மொத்தம் 9 பேரிடம் ரூ.80 லட்சம் வரை கடன் பெற்று இருந்ததாக தெரிகிறது. இதனை அவர் வார வட்டிக்கு வாங்கி இருந்தார்.

ஆனால் பணத்தை பிரகாசால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் மன உளைச்சலில் இருந்த பிரகாஷ் குடும்பத்தினை கொலை செய்து விட்டு தற்கொலை முடிவுக்கு சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இதையடுத்து பிரகாசுக்கு கடன் கொடுத்தவர்கள் யார்-யார்?, கடைசியாக அவரிடம் யார் பேசினார்? என்பது குறித்து செல்போனை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

பிரகாஷ் அதே பகுதியில் தனக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டை ரூ.9 ஆயிரத்துக்கு வாடகைக்கு விட்டு விட்டு அவர் ரூ.12 ஆயிரம் வாடகைக்கு குடியிருந்து உள்ளார்.

கடன் பிரச்சினை குறித்து பிரகாஷ் பெற்றோரிடம் கூறியபோது, அவர்கள் சொந்த வீட்டை விற்று கடனை அடைக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில் பிரகாஷ் குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. பிரகாசுக்கு கடன் கொடுத்தவர்கள் பற்றிய விவரத்தை சேகரித்து வருகிறோம்.

கொலை செய்வதற்கு முன்பு மனைவி, குழந்தைகளுக்கு பிரகாஷ் விஷம் கொடுத்தாரா? என்பது பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரிய வரும். வீட்டில் இருந்த கேக் மற்றும் உணவை பரிசோதனைக்காக அனுப்பி உள்ளோம். அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம்” என்றனர்.

Tags:    

Similar News