உள்ளூர் செய்திகள்
உணவு பொருட்களின் பயன்கள் குறித்தும், அதை செய்வது குறித்த செய்முறை விளக்கமும் அங்கு இடம் பெற்றிருந்தது.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவுத்திருவிழா மற்றும் மருத்துவ முகாம் திருப்பூர் மாநகராட்சி 29-வது வார்டுக்குட்பட்ட ஓடுக்காடு மாநகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதா வரவேற்றார். இதில் கம்பு, ராகி, திணை உள்ளிட்ட இயற்கை உணவு பொருட்களால் செய்யப்பட்ட ராகி புட்டு, ராகி ரொட்டி, ராகி களி, குதிரை வாலி கிச்சடி, பணியாரம், பொங்கல், கம்பு இட்லி, பாயாசம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகளை சுற்று வட்டாரத்தை சேர்ந்த அங்கன்வாடி பணியாளர்கள் காட்சிப்படுத்தினார்கள்.
மேலும் உணவு பொருட்களின் பயன்கள் குறித்தும், அதை செய்வது குறித்த செய்முறை விளக்கமும் அங்கு இடம் பெற்றிருந்தது. இந்த உணவு திருவிழாவை மாணவர்கள், பெற்றோர் மற்றும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார் ஆகியோர் ஆர்வமுடன் பார்வையிட்டதுடன், உணவு வகைகளை சாப்பிட்டு, அதனால் ஏற்படும் பயன்களை தெரிந்து கொண்டனர்.
இதில் மேற்பார்வையாளர் காந்திமதி, டாக்டர் கோபாலகிருஷ்ணன், 29-வது வார்டு கவுன்சிலர் சின்னசாமி உள்பட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.