உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஜல்லிப்பட்டியில் புதர்மண்டி கிடக்கும் உயர்மட்ட கால்வாய் - விவசாயிகள் கவலை

Published On 2022-05-26 14:56 IST   |   Update On 2022-05-26 14:56:00 IST
கருவேலமரங்களால் சூழப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது.

உடுமலை:

பி.ஏ.பி., பாசனத்துக்கு உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் உயர் மட்ட கால்வாய்க்கு மட்டும் தனியாக ஷட்டர் அமைக்கப்பட்டு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இக்கால்வாய் வாயிலாக ஜல்லிபட்டி சுற்றுப்பகுதியில், 2,477 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், 5 கி.மீ., தொலைவுக்கு அமைந்துள்ள இக்கால்வாய் சுற்றுப்பகுதி நிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாகவும் உள்ளது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாததால் உயர்மட்டக் கால்வாய் சீமை கருவேல மரம் உள்ளிட்ட மரங்களால் காணாமல் போயுள்ளது.

வனம் போல் காட்சியளிக்கும் இக்கால்வாய் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக பாசன வசதி அளிக்கும் கால்வாய். தற்போது கருவேலமரங்களால் சூழப்பட்டுள்ளது வேதனையளிப்பதாக உள்ளது. கரைகள் முழுமையாக சேதமடைந்து, புதர் மண்டி, தகவல் பலகையை வைத்தே, உயர் மட்ட கால்வாயை கண்டறிய வேண்டிய அவலம் அப்பகுதியில் நிலவுகிறது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: -மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாக உயர் மட்ட கால்வாய் உள்ளது. இப்பகுதியில், சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும்,கால்வாய் பராமரிப்பில், பொதுப்பணித்துறையினர் அலட்சியம் காட்டுகின்றனர். உயர் மட்ட கால்வாயை பாசனத்துக்கு முன் தேடும் அவல நிலையை மாற்ற உடனடியாக பராமரிப்பு பணிகளை துவக்க வேண்டும். புதர்களை அகற்றி, கரைகளை சீரமைப்பது அவசியமாகும். இல்லாவிட்டால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து, ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் செய்வது கேள்விக்குறியாகி விடும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News