உள்ளூர் செய்திகள்
ஊட்டி, கொடைக்கானல் போன்று ஏலகிரியை மேம்படுத்த வேண்டும் - மலைகிராம மக்கள் வலியுறுத்தல்
கொடைக்கானல் போன்று ஏலகிரியை மேம்படுத்த வேண்டும் என மலைகிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் ஏலகிரி மலை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு பொது மக்கள் கருத்துகேட்பு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார்.
கருத்து கேட்பு கூட்டத்தில் மலைவாழ் மக்கள் கூறுயதாவது:-
பொன்னேரியில் இருந்து ஏலகிரி மலைக்கு 14 கிலோமீட்டர் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஏலகிரி மலை 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது சிறப்புக்குரியது.
இந்த மலை சாலை ஆனது குறுகிய சாலையாக உள்ளதால் 3 மீட்டர் சாலையை அகலப்படுத்த வேண்டும். ஏலகிரி மலைக்கு வரும் பஸ்கள் தரமானதாக இயக்க வேண்டும்.
அனைத்துக் காலங்களிலும் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலையில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை நவீனப்படுத்தி ஊட்டி, கொடைக்கானல் போன்று சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும்.
மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் இது சார்ந்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.