உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

தென்கொரிய ஆடை கண்காட்சியில் பங்கேற்க திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு

Published On 2022-05-25 10:20 GMT   |   Update On 2022-05-25 10:20 GMT
அரசு மானியத்துடன், கண்காட்சிக்கான அரங்க கட்டணம் 1.50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

உலகளாவிய நாடுகளில் நடைபெறும் கண்காட்சிகளில், இந்திய ஏற்றுமதியாளரை பங்கேற்க செய்து நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) கைகொடுத்து வருகிறது.

கடந்த 2020ல் உலகளாவிய நாடுகளிலிருந்து மொத்தம் 68 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயத்த ஆடை ரகங்களை தென்கொரியா இறக்குமதி செய்துள்ளது. இதில் இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு 495 கோடி ரூபாயாக, வெறும் 0.73 சதவீத அளவே உள்ளது.

இந்திய ஆயத்த ஆடை ரகங்களுக்கு தென்கொரிய நாடுகளில் சிறந்த வர்த்தக வாய்ப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, முதல் முறையாக, தென்கொரிய கண்காட்சியில் இந்திய ஏற்றுமதியாளரை பங்கேற்கச் செய்ய ஏ.இ.பி.சி., ஏற்பாடு செய்துள்ளது.

தென்கொரிய தலைநகர் சியோலில் வரும் ஆகஸ்டு 24-ந் துவங்கி 26-ந் தேதி வரை ஆயத்த ஆடை கண்காட்சி நடைபெற உள்ளது. இதில், இந்திய ஏற்றுமதியாளர்கள் பங்கேற்க ஏ.இ.பி.சி., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், அதிக எண்ணிக்கையில் இந்த கண்காட்சியில் பங்கேற்க, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது. அரசு மானியத்துடன், கண்காட்சிக்கான அரங்க கட்டணம் 1.50 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வரும் 31-ந் தேதிக்குள் பதிவு செய்வோருக்கு, ஏ.இ.பி.சி., சார்பில், அரங்க கட்டணத்தில், 10 ஆயிரம் ரூபாய் சலுகை வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 0421 2232634, 94422 89222, 99441 81001 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News