உள்ளூர் செய்திகள்
பனப்பாக்கத்தில் மயூரநாதர் திருவிழா
பனப்பாக்கத்தில் மயூரநாதர் திருவிழா நடைபெற்றது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சவுந்தர நாயகி சமேத மயூரநாதர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் முருகன், விநாயகர், தட்சிணாமூர்த்தி, சேக்கிழார் பெருமான், மாணிக்கவாசகர் உள்ளிட்ட நாயன்மார்களுக்கு தனித் தனியாக சன்னதிகள் அமைந்துள்ளது.
இந்த கோவில் பிரம்மன், இந்திரன், திருமால், அகத்தியர், நந்திதேவர் உள்ளிட்டவர்கள் பூஜை செய்து வழிபட்ட பழமைவாய்ந்த தலமாகும்.மேலும் உமையம்மை மயில் வடிவத்தில் சிவபெருமானை வணங்கிய புண்ணியத் தலமாகும்.
இந்நிலையில் நேற்று காலை 5 மணிக்கு மங்கல வாத்தியங்கள் முழங்க திருவிழா தொடங்கியது.தொடர்ந்து மயூரநாதர் உள்ளிட்ட 63 நாயன்மார்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
காலை 8 மணிக்கு மயூரநாதர், சவுந்திர நாயகி அம்மன், முருகன், விநாயகர் மற்றும் 63 நாயன்மார்கள் தனித் தனி வாகனத்தில் மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.அப்போது சிவ வாத்திய கணங்கள் முழங்க தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பன்னிரு திருமுறைகள் ஓதுவார்களால் இசையுடன் பாடப்பட்டது.
திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.