உள்ளூர் செய்திகள்
அரக்கோணத்தில்– இடமாற்றம் செய்வதை கண்டித்து தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

அரக்கோணத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-05-13 09:31 GMT   |   Update On 2022-05-13 09:31 GMT
அரக்கோணத்தில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
நெமிலி:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகராட்சியில் பழனிபேட்டை, பஜார் பகுதி மற்றும் சுவால்பேட்டை என 3 கோட்டத்தில் 190 நிரந்தர தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் அனைவரும் ஒன்றாக இணைத்து பழனிபேட்டை கோட்டத்தில் மட்டுமே வேலை செய்யும் படி இடமாறுதல் செய்து ஆணையர் லதா உத்தரவிட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து நிரந்தர தூய்மைப் பணியாளர்களும் நேற்று காலை சுவால்பேட்டை அலுவலகம் முன்பு பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே சிஐடியு மாவட்ட துணை செயலாளர் ஏபிஎம் சீனிவாசன் தொழிலாளர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

அப்போது தொழிற்சங்கங்களை கலந்து ஆலோசிக்காமலும், தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் தன்னிச்சையாக முன் அறிவிப்பின்றி பணியிட மாற்றம் செய்யக்கூடாது என கூறி எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டார். தகவலறிந்து அங்கு வந்த நகராட்சி துணை தலைவர் கலாவதி அன்புலாரன்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். 

அப்போது நகராட்சி ஆணையரிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு தூய்மை பணிகளை மேற்கொண்டனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News