உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பல்லடத்தில் செல்போன் - மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2022-04-23 16:17 IST   |   Update On 2022-04-23 16:17:00 IST
செல்போன்களை தலையணை அருகில் வைத்து விட்டு தூங்கி விட்டனர். மீண்டும் நேற்று காலை எழுந்து பார்த்தபோது 2 செல்போன்களையும் காணவில்லை.
பல்லடம்:

பெரம்பலூர் மாவட்டம் லெம்பைகுடிகாடு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(வயது 35). கட்டிட தொழிலாளி. இவரும் இவரது நண்பர்கள் சிலரும் பல்லடம் -செட்டிபாளையம் சாலையில் கட்டப்பட்டு வரும் தனியாருக்குச் சொந்தமான கட்டிடத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து தூங்கச் சென்றனர். அவர்களது செல்போன்களை தலையணை அருகில் வைத்து விட்டு தூங்கிவிட்டனர். மீண்டும் நேற்று காலை எழுந்து பார்த்தபோது 2 செல்போன்களையும் காணவில்லை. இதுகுறித்து பல்லடம் போலீசில் புகார் அளித்தனர். 

இந்நிலையில் நேற்று பல்லடம் பனப்பாளையம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர் கட்டிட தொழிலாளர்களிடம் செல்போன் திருடியது தெரியவந்தது. மேலும் அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பல்லடம் அருகே உள்ள தெற்குபாளையம் பகுதியில் திருடிய தாகவும், அதே பகுதியில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர்களிடம் 3 செல்போன்கள் திருடியதும் தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அவர் கோவை, தடாகம் ரோட்டை சேர்ந்த ஆனந்தன் மகன் மாதேஷ்,( வயது 20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 1 மோட்டார் சைக்கிள், 5 செல்போன்கள், ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News