உள்ளூர் செய்திகள்
பல்லடம் பகுதியில் மின்தடையால் தொழில்கள் முடங்கும் அபாயம்
அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்சாதன பொருட்கள் பழுது அடைவதும், தொழிற்சாலைகளில் வேலை பாதிப்பும் ஏற்படுகின்றன.
பல்லடம்;
பல்லடம் பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். விசைத்தறி, கோழிப்பண்ணை, பனியன் நிறுவனங்கள் உள்ளிட்டவை இயங்கிவருகின்றன.
இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் தடையால் அவதிப்படுவதாகவும், மின் தடையால் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:
பல்லடத்தில் கடந்த சில நாட்களாக, அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. முன்னறிவிப்பின்றி மின் வாரியம் மின்சாரத்தை தடை செய்வதால் செய்வதால், பொது மக்களுக்கு கடும் அவதி ஏற்படுகிறது. அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், கோடை வெயில் காலத்தில் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றோம்.
மேலும் மாணவர்கள் கல்வி பயில்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், மின்சாதன பொருட்கள் பழுது அடைவதும், தொழிற்சாலைகளில் வேலை பாதிப்பும் ஏற்படுகின்றன.
இதனால் விசைத்தறி, பனியன் தொழில்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் தடைபடும் நேரத்தை முறையாக தெரிவித்தால் கூட அதற்கேற்ப வேலைகளை திட்டமிட முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.