உள்ளூர் செய்திகள்
நெல்லை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தயார் நிலையில் உள்ள படுக்கைகள்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 300 படுக்கைகள்

Published On 2022-04-23 16:01 IST   |   Update On 2022-04-23 16:01:00 IST
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை அரசு மருத்துவமனையில் தயார் நிலையில் 300 படுக்கைகள் உள்ளது என மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறினார்.
நெல்லை:

கொரோனா தொற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது டெல்லி மற்றும் சில வட மாநிலங்களில் மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் எனவும், மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக முகக்கவசம் அணிவது குறித்து போலீசார் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அனைத்து மருத்துவ மனைகளிலும் மீண்டும் கொரோனா வார்டுகளை மறு கட்டமைப்பு செய்ய தமிழக மருத்துவக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அதன்படி நெல்லை அரசு மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஏற்கனவே கடந்த முறை கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது நெல்லை அரசு மருத்துவமனை மற்றும் மேலும் சில இடங்களில் கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நெல்லை அரசு மருத்துவமனையில் படுக்கையுடன் கூடிய கொரோனா வார்டுகள் அமைக்கப்பட்டு இருந்தது.

தொற்று குறைந்தாலும் அந்த வார்டுகள் அப்படியே இருந்தது. இந்நிலையில் அந்த வார்டுகள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியதாவது:-

நெல்லை அரசு மருத்துவமனையில் ஏற்கனவே செயல்பட்டு வந்த கொரோனா வார்டுகள் தொற்று குறைந்த நிலையிலும் அகற்றப்படாமல் இருந்தது. தற்போது அது புதுப்பிக்கப்பட்டு 300 படுக்கை வசதியுடன் தயார் நிலையில் உள்ளது. மருத்துவமனைக்கு வருவோர் கண்டிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

மேலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைகள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொற்று அதிகரித்தாலும் சிகிச்சை அளிக்க தயார் நிலையில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News