உள்ளூர் செய்திகள்
முன்விரோதத்தில் மூதாட்டியை தாக்கியவர்கள் கைது
திருவாரூர் அருகே முன்விரோதத்தில் மூதாட்டியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவாரூர்:
திருவாரூர் அருகே தேவர்கண்டநல்லூரைச் சேர்ந்தவர் சாவித்திரி (வயது 65). இவரது கணவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவர்களது மகள் தமிழ்கொடி (35). இவர் தேவர்கண்டநல்லூரில் வசித்து வருகிறார். அதே தேவர்கண்டநல்லூர் பகுதியில் வசிப்பவர் இளங்கோவன் (53). இளங்கோவன் மற்றும் தமிழ்கொடி ஆகியோருக்கு சொத்து பிரச்சனை இருந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் அது தொடர்பான முன்விரோதம் காரணமாக இளங்கோவன் மற்றும் அவரது சகோதரர் ரவி, இவர்களது தந்தை சண்முகம் ஆகிய 3 பேரும் சேர்ந்து தமிழ்கொடியின் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த அவரது தாய் சாவித்திரியை திட்டி கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த சாவித்திரி திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக தமிழ்கொடி கொடுத்த புகாரின் பேரில் கொரடாச்சேரி சப்&இன்ஸ்பெக்டர் வேல்முருகன், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இளங்கோவன், ரவி, சண்முகம் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக இளங்கோவன், ரவி ஆகிய இருவரையும் கைது செய்து திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த திருத்துறைப்பூண்டி நீதிபதி இளங்கோவன் மற்றும் ரவி ஆகிய இருவரையும் மே 5ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் இருவரும் நன்னிலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.