உள்ளூர் செய்திகள்
கோவையில் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பயணியின் பெட்டி
பொதுமக்கள் சிலர் இது குறித்து பாதுகாப்பில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரிடம் தகவல் தெரிவித்தனர்
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்துக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களுக்கு தினமும் 20 விமானங்கள் இயக்கப்படுகிறது. 1000 கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று முக்கிய அரசியல் தலைவர்கள் சிலர் வந்ததால் விமான நிலைய வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. அப்போது விமான நிலைய பிரதான வாயில் அருகே நீண்ட நேரமாக கேட்பாரற்று ஒரு பெட்டி கிடந்தது.
இதனை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் சிலர் இது குறித்து பாதுகாப்பில் இருந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினரிடம் தகவல் தெரிவித்தனர்.அவர்கள் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவி உள்ளிட்டவற்றை வைத்து சோதனையிட்டனர்.
பின்னர் அந்த பெட்டியை ஆய்வு செய்வதற்காக போலீசார் எடுத்துச் சென்றனர்.சிறிது நேரம் கழித்து ஒருவர் அந்த பெட்டி இருந்த இடத்துக்கு வந்து வெகு நேரமாக சுற்றி திரிந்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் தான் இயற்கை உபாதை கழிக்க கழிவறைக்கு சென்றதாகவும், அதனால் தான் கொண்டு வந்த பெட்டியை இங்கு வைத்து சென்றேன். திரும்பி வந்து பார்த்தபோது பெட்டி மாயமாகிவிட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட போலீசார் பெட்டி தங்களிடம் இருப்பதாக கூறினர். இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி அவரின் விவரங்களை பெற்று கொண்டு பெட்டியை திருப்பி ஒப்படைத்தனர்.