உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கல் மண்டபங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் நடத்த ஏற்பாடு-கலெக்டர் விஷ்ணு பேட்டி

Published On 2022-04-23 09:49 GMT   |   Update On 2022-04-23 09:49 GMT
தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கல் மண்டபங்களில் இல்லம் தேடி கல்வி திட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என கலெக்டர் விஷ்ணு கூறினார்.
நெல்லை:

காரையாறு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் மெகா தூய்மைப் பணியை தொடங்கி வைத்த பின்னர் கலெக்டர் விஷ்ணு சிவந்திபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றில் சுத்தப்படுத்தும் மெகா தூய்மைப் பணி தற்போது தொடங்கி உள்ளது. இதனை முதலில் காணி குடியிருப்பில் தொடங்கி வைத்துள்ளேன்.

மருதூர் அணைக்கட்டு வரையிலும் இந்த மெகா தூய்மைப் பணி 4 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல்கட்டமாக சின்ன மயிலாறு காணிக்குடியிருப்பு பகுதியில் தொடங்கி அம்பை வரையிலும், இரண்டாவது கட்டமாக அம்பையில் தொடங்கி சுத்தமல்லி அணைக்கட்டு வரையிலும், தூய்மை பணி நடக்கிறது.

அதன்பின்னர் சுத்தமல்லியில் இருந்து மாநகர பகுதிவரை மூன்றாவது கட்டமாகவும், அங்கிருந்து மருதூர் அணைக்கட்டு வரை நாலாவது கட்டமாகவும் தூய்மை பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 தமிழக அரசு அறிவித்தபடி ‘தூய பொருநை நெல்லைக்கு பெருமை’ என்ற விதத்தில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்தில் சுத்தமாக வைத்திருப்பது குறித்தும், மீண்டும் மஞ்சப் பையை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பிளாஸ்டிக் உபயோகத்தை குறைக்கும் வகையிலும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

50-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் நடைபெற உள்ள இந்த தூய்மைப் பணியில் தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினரும் பங்கேற்று உள்ளனர்.

தாமிரபரணி ஆற்று நீரின் தரத்தை குளிப்பதில் இருந்து குடிப்பதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.  இந்த பணி வருகிற நவம்பர் மாதம் வரையிலும், அதன் பின்னர் அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

 தாமிரபரணி ஆற்றங்கரை ஓரம் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏராளமான கல் மண்டபங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல் மண்டபங்களை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை நீக்கி அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 இதுவரை முதல்கட்டமாக 10 கல் மண்டபங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கல் மண்டபங்கள் சீரமைத்து நாட்டுப்புற கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவ-மாணவிகள் பயில நடவடிக்கை எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News