உள்ளூர் செய்திகள்
.

தலைவாசல் அருகே பெண் சாவு-தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது

Published On 2022-04-23 15:11 IST   |   Update On 2022-04-23 15:11:00 IST
தீக்குளித்து பெண் சாவு-தற்கொலைக்கு தூண்டியதாக கணவரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்:

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அசோக் (வயது40), ஆட்டோ டிரைவர். இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் அய்யனார்பாளையம் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி (38) என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக அசோக் தனது குடும்பத்தினருடன் மாமனார் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சொந்த கிராமமான புத்தூருக்கு வந்து குடியேறினார்.

இந்த நிலையில் கடந்த 21ந் தேதி கணவன்மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. தகராறு முற்றியதில் மகாலட்சுமி தனது வீட்டில் இருந்த மண் எண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அப்போது அவரின் மேல் பற்றி எரிந்த தீ வீட்டின் மேற்கூரையிலும் பரவியது. இதில் கூரையும் சேதம் அடைந்தது.

தகவலறிந்த தலைவாசல் போலீசார் அங்கு விரைந்து வந்து மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் பெண்ணின் சகோதரர் ராஜா தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

மகாலட்சுமியை அவரது கணவர் தற்கொலைக்கு தூண்டியதால் தான் தீக்குளித்து இறந்துள்ளார். எனவே அசோக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதன்பேரில், மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக அசோக் மீது தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Similar News