உள்ளூர் செய்திகள்
அரசு அதிகாரிகள் வராததை கண்டித்து தலைவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
அரசு அதிகாரிகள் வராததை கண்டித்து தலைவாசல் ஒன்றியக்குழு கூட்டத்தை தலைவர், கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
ஆத்தூர்:
தலைவாசல் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைவாசல் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி தலைமை தாங்கினார். தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் தாமரைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ரமணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அஞ்சலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர், தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேர், பா.ம.க. கவுன்சிலர்கள் 2 பேர், ம.தி.மு.க., ஐ.ஜே.கே. கட்சி கவுன்சிலர்கள் தலா ஒருவர் என மொத்தம் 19 பேர் கலந்து கொண்டனர். மாவட்ட கவுன்சிலர் இளங்கோவனும் கலந்து கொண்டார். கூட்டத்தில் வட்டார கல்வி துறை அதிகாரி ஒருவரும் பங்கேற்றார்.
கூட்டம் தொடங்கி 10-வது நிமிடத்தில் ஒன்றியக்குழு தலைவர் ராமசாமி பேசினார். அவர் பேசும் போது, ‘அ.தி.மு.க. கட்சியை சேர்ந்தவர் ஒன்றிய குழு தலைவர் பதவியில் இருப்பதால் தொடர்ந்து ஒன்றியக்குழு கூட்டத்திற்கு வருவாய், போக்குவரத்து, மின்சாரம், வளர்ச்சி துறை என பல்வேறு துறை அதிகாரிகள் யாரும் முறையாக கலந்து கொள்வது இல்லை. தொடர்ந்து அரசுத்துறை அதிகாரிகள் புறக்கணித்து வருவதால் இந்த கூட்டத்தை நடத்தாமல் புறக்கணித்து என்னுடைய தலைமையில் ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்கிறோம்’ என்றார்.
இதையடுத்து கூட்ட அரங்கை விட்டு தலைவர் தலைமையில் அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். அப்போது அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டால் தான் இனி கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று தலைவர் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் தெரிவித்தனர்.