உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

தரமற்ற விதை -படைப்புழு தாக்குதலால் காலிபிளவர், மக்காச்சோளம் சாகுபடி பாதிப்பு விவசாயிகள் கவலை

Published On 2022-04-23 14:10 IST   |   Update On 2022-04-23 14:10:00 IST
தரமற்ற விதையால், காலிபிளவர் சாகுபடி முற்றிலுமாக பாதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
குடிமங்கலம்:

குடிமங்கலம் வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு பரவலாக காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. தக்காளி, கத்தரி, பச்சை மிளகாய் மட்டுமல்லாது கடந்த சில ஆண்டுகளாக காலிபிளவர் சாகுபடிக்கும் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வட்டாரத்தில் தரமில்லாத விதையால் தொடர் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. 

குடிமங்கலம், கோட்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், செடி முருங்கை சாகுபடியில் இப்பிரச்சினை அதிக அளவு இருந்தது. 

தற்போது மூங்கில்தொழுவு, மண்ணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தரமற்ற விதையால், காலிபிளவர் சாகுபடி முற்றிலுமாக பாதித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து மண்ணாம்பாளையம் விவசாயி ஒருவர் கூறியதாவது:

காலிபிளவர் சாகுபடிக்காக, உடுமலையிலுள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில், 10 கிராம் கொண்ட விதை பாக்கெட் 600 ரூபாய்க்கு வாங்கினேன். 

ஒன்றரை ஏக்கருக்கு சுமார் 12 பாக்கெட் விதை வாங்கி நடவு செய்தேன். களையெடுத்தல், உரமிடுதல், மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக, ஏக்கருக்கு, பல ஆயிரம் ரூபாய் செலவு பிடித்தது. 

வழக்கமாக, காலிபிளவர் செடிகளில் 75 நாட்களில் பூ பிடிக்கும். ஆனால், 100 நாட்களாகியும் விளைநிலத்திலுள்ள செடிகள் பூ பிடிக்காமல் வெறுமையாக உள்ளது. ஒன்றரை ஏக்கர் முழுவதும் இதே நிலை காணப்படுகிறது.

தரமில்லாத விதையால் ஒரு லட்ச ரூபாய்க்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 

பல மாதங்கள் பராமரித்த பயிரில் விளைச்சல் இல்லாமல், அப்படியே உழவு செய்யும் அவல நிலை உருவாகியுள்ளது. 

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மோகனரம்யா கூறுகையில், 

தரமில்லாத விதை பிரச்சினை குறித்து, விதைச்சான்று துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படும். நோய்த்தாக்குதலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து நேரடி ஆய்வு செய்கிறோம் என்றார்.

மேலும் படைப்புழு தாக்குதலால், மக்காச்சோள உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக பல்லடம்  விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பல்லடம் வட்டாரத்தில் ஆண்டுதோறும் பரவலாக மக்காச்சோளம் பயிரிடப்படுகின்றன. 

கடந்த காலங்களில் புழு தாக்குதல் காரணமாக  ஏற்பட்ட பாதிப்பு விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தமிழக அரசு வழங்கிய பூச்சி மருந்துகளால் புழுக்கள் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்தன. தற்போது மீண்டும் படைப்புழு பாதிப்பு ஏற்பட்டு வருவதாக விவசாயிகள் கவலைப்படுகின்றனர்.நொச்சிபாளையத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறியதாவது:

ஏக்கருக்கு 8 கிலோ மக்காச்சோள விதைகள் வேண்டும். விதைக்கப்பட்ட 120 நாட்களில் அறுவடைக்கு வரும். நல்ல விளைச்சல் இருந்தால்  ஏக்கருக்கு, 20 குவிண்டால் வரை கிடைக்கும். படைப்புழு தாக்குதல் காரணமாக  உற்பத்தி பாதிக்கப்பட்டு 10 முதல் 12 குவின்டால் மட்டுமே கிடைக்கும்.

பயிரிட்டு 60 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், படைப்புழுக்கள் பயிர்களின் வளர்ச்சியை தடுத்து வருகின்றன. 

மருந்துகள் தெளித்தும் படைப்புழு கட்டுக்குள் வரவில்லை. குவிண்டால் ஒன்று  2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

இது நல்ல விலை என்ற போதும், உற்பத்தி குறைந்ததன் காரணமாக லாபம் ஈட்ட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News