உள்ளூர் செய்திகள்
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் உளுந்து - பாசிப்பயிறு கொள்முதல்
கொள்முதல் செய்யப்படும் பாசிப்பயிறு, உளுந்து ஆகியவற்றிற்கான உரியதொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
உடுமலை:
உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், உளுந்து மற்றும் பாசிப்பயிறு கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரியவிலை கிடைக்கும் வகையில் உளுந்து மற்றும் பாசிப்பயிறு சாகுபடி செய்த விவசாயிகள் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு மத்திய அரசின் நாபெட் நிறுவனத்தின் வாயிலாக உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
உளுந்தினை குறைந்தபட்ச ஆதார விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.63க்கும் பச்சைபயிறினை கிலோ ஒன்றுக்கு ரூ.72.75-க்கும் வரும் மே 15-ந்தேதி வரை கொள்முதல் செய்யப்படுகிறது. உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சரவணன் கூறியதாவது:-
இத்திட்டத்தின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கி கணக்கு ஆகிய விபரங்களுடன் உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகலாம்.
மேலும் செல்போன் எண் 9940919150 தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
கொள்முதல் செய்யப்படும் பாசிப்பயிறு, உளுந்து ஆகியவற்றிற்கான உரியதொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.