உள்ளூர் செய்திகள்
நகையை பறிக்கொடுத்த மூதாட்டி சோகத்தில் அமர்ந்திருக்கும் காட்சி.

கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2022-04-23 13:57 IST   |   Update On 2022-04-23 13:57:00 IST
கொங்கணாபுரம் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறித்த கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரி ஊராட்சி பூவனூரில் வசித்து வருபவர் ஜெயலட்சுமி ( 65).  இவரது கணவர் ராமர் இறந்துவிட்டதால் ஜெயலட்சுமி தனியே வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 

மகன் வெங்கடாசலத்திற்கு திருமணமாகி அருகிலேயே தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ஜெயலட்சுமி வீட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் 2 பேர் ஜெயலட்சுமி அணிந்திருந்த தாலியை பறித்து உள்ளனர். 

இதை சற்றும் எதிர்பாராத ஜெயலட்சுமி கூச்சலிடவே அருகிலுள்ள மகன் வெங்கடாசலம் ஓடி வருவதை அறிந்த கொள்ளையர்கள் தாலியை மட்டும் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடினர். 

அதிர்ஷ்டவசமாக ஜெயலட்சுமி அணிந்திருந்த தோடு மாட்டல் , மூக்குத்தி தப்பியது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.  

இச்சம்பவம் குறித்து கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் . இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறை உயரதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுத்து இதுபோன்ற கொள்ளை சம்பவங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திடுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

Similar News