உள்ளூர் செய்திகள்
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பத்தாமுதைய பொங்காலை வழிபாடு
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பத்தாமுதைய பொங்காலை வழிபாடு - திரளான பக்தர்கள் பங்கேற்பு
நாகர்கோவில்:
கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவிலில் பங்குனி தூக்க திருவிழாவை தொடர்ந்து மூலகோவிலில் சித்திரை 10-ம் நாள் பத்தாமுதைய பொங்காலை வழிபாடு இன்று நடந்தது.
காலையில் வழக்கமான பூஜைகள் முடிவடைந்து 10.15 மணிக்கு கோவில் தந்திரி கொட்டாரகரை நீலமனை ஈஸ்வரன் போற்றி பண்டார அடுப்பிற்கு தீ மூட்டினார்.அதன் பின்பு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பொங்கல் நேர்ச்சை நடத்தினர்.
தூக்க நேர்ச்சையில் கலந்து கொண்ட குழந்தைகளின் பெற்றோர் இதில் கலந்து கொள்வது சிறப்பு என்பதால் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான. பெண்கள் குடும்பத்தோடு இதில் கலந்து கொண்டு நேர்ச்சை நடத்தினர்.
சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றளவிற்கு நேர்ச்சை நடந்தது. பொங்காலை நேர்ச்சை முடிவடைந்த பிறகு கோவிலில் சுத்திகலச பூஜையும் லட்சார்ச்சனையும் நடைபெற்றது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உணவு மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
விழா ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராமசந்திரன் நாயர் செயலாளர் மோகன்குமார் பொருளாளர் ஸ்ரீனிவாசன் தம்பி, துணை தலைவர் சதிகுமாரன் நாயர், துணை செயலாளர் விஜூகுமார் தலைமையில் கமிட்டி அங்கத்தினர்கள் செய்திருந்தனர்.