உள்ளூர் செய்திகள்
இயற்கையாக மரணம் அடையும் கட்டிட தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்
இயற்கையாக மரணம் அடையும் கட்டிட தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என பி.எம்.எஸ். தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி:
கல்குளம் தாலுகா அலுவலகம் முன் தக்கலை, திருவட்டார் ஒன்றிய பி.எம்.எஸ். சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், வாகன ஓட்டுனர்கள், தெருவோரம் வியாபாரம் செய்வோர், முடி திருத்துவோர், தையல் தொழிலாளர்கள்,
நகைத் தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், மண்பாண்டம் செய்பவர், நெசவு தொழிலாளர்கள், சுமை தூக்குவோர் போன்ற பல்வேறு வகையான தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் பணிக்கு சென்றுவர இலவச பஸ் பாஸ் வழங்க கேட்டும்.
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் கல்வி உதவித் தொகை வழங்க கேட்டும், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நோய்வாய்ப்பட்டு இயற்கையாக மரணமடைய நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இயற்கை மரணம் உதவி தொகை வழங்கிட வேண்டுமென்றும்,
நல வாரியங்களில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களின் குடும்பத்திற்கு மருத்துவ காப்பீடு கிடைக்கும் வரையில் இ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தின் உறுப்பினராக ஆவணம் செய்திட வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
போராட்டத்திற்கு திருவட்டார் ஒன்றிய தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். தக்கலை ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பொருளாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ஜெயக்குமார் கோஷங்களிட்டு போராட்டத்தை துவக்கி வைத்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் முருகன், மாநில துணைத் தலைவி கிரிஜா, செயற்குழு உறுப்பினர் விஸ்வநாதன் உட்பட பலர் பேசினர். கனகராஜ் நன்றி உரையாற்றினார்.