உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் திருவிழாக்களால் களை கட்டும் கோவில்கள்

Published On 2022-04-23 12:39 IST   |   Update On 2022-04-23 12:39:00 IST
28-ந்தேதி பொங்கல் விழா, 29-ந்தேதி மஞ்சள் நீர், மகா அபிஷேக விழா மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் பல இடங்களில் அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா நடந்து வருகிறது. 2ஆண்டுகளுக்கு பின் விழா நடப்பதால், பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இதனால் கோவில் களை கட்டி காணப்படுகின்றன.

திருப்பூர் அரிசிக்கடை வீதியிலுள்ள டவுன் மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவிலில் பூச்சாட்டு பொங்கல் விழா, பூச்சாட்டு பூஜையுடன் தொடங்கியது. வருகிற 26-ந்தேதி கம்பம் எடுத்து வந்து நடுதல், 27-ந்தேதி பட்டத்தரசி அம்மன் அழைப்பு, மாவிளக்கு, பூவோடு ஊர்வலம், அம்மை அழைத்தல் நடக்கிறது.

28-ந்தேதி பொங்கல் விழா, 29-ந்தேதி மஞ்சள் நீர், மகா அபிஷேக விழா மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. பொங்கல் விழாவையொட்டி தினமும் சிறப்பு அலங்கார பூஜை நடந்து வருகிறது. 

திருப்பூர் அருகே காவிலிபாளையம் புதூரில் உள்ள ஸ்ரீமாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா விமரிசையாக நடந்தது. மாலை, மாவிளக்கு ஊர்வலமும், அன்னதானமும் நடைபெற்றது.  பெண்கள் பங்கேற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியும், கும்மியாட்டமும், பரவசமூட்டும் பெருஞ்சலங்கை ஆட்டமும் நடந்தது.

திருமுருகன்பூண்டியிலுள்ள ஆலமரத்து முத்துமாரியம்மன் கோவில், 42ம் ஆண்டு சித்திரை பொங்கல் விழா, குண்டம், மாவிளக்கு திருவிழா நடந்தது. கடந்த 12-ந்தேதி, பூச்சாட்டுடன், விழா துவங்கியது. 16-ந்தேதி கிராம சாந்தி, 17-ந்தேதி சக்தி கம்பம் நடுதல் மற்றும் அன்னதானம், 20-ந் தேதி, குண்டத்துக்கு பூ போடுதல், கும்பம், படைக்கலம் எடுத்துவருதல், அம்மை அழைத்தல், பால்குடம் திருவீதியுலா, திருக்கல்யாண உற்சவ ரதம், திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன.

திருப்பூர் பிச்சம்பாளையம் ஸ்ரீமாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழாவில் வருகிற 3-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், 4-ந்தேதி பொங்கல் விழாவும் நடக்கிறது. வரும் 26-ந்தேதி இரவு கம்பம் நடுதல், 27-ந் தேதி மாலை 108 கலச பூஜை, 28-ந்தேதி காலை 108 வலம்புரி சங்காபிஷேக பூஜை, 29-ந் தேதி காலை பால்குடம் கொண்டுவரும் நிகழ்ச்சி, மாலை திருவிளக்கு பூஜை நடக்கிறது.

வரும் 30-ந்தேதி தேதி காலை சிறப்பு அபிஷேகம், மாலை நவசக்தி அர்ச்சனை, மே 1-ந்தேதி பெருஞ்சலங்கை ஆட்டம், 2-ந் தேதி காலை அக்னி அபிஷேகம், விநாயகர் பொங்கல், 3-ந் தேதி சிறப்பு அபிஷேகம் திருக்கல்யாண உற்சவம், 4-ந் தேதி மாவிளக்கு, பொங்கல், 5-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழா பூஜைகள் நடக்கின்றன.

Similar News