கம்பைநல்லூர் அருகே வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதை கண்டித்ததால் முதியவரை கல்லால் தாக்கி கொன்ற மகன்
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூர் அடுத்துள்ள சின்னகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் (வயது75). இவரது மகன் வெற்றிவேல். இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளது.
இந்த நிலையில் வெற்றி வேலுக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு நடந்தது. இதனால் மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் வெற்றிவேல் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியதாக தெரிகிறது. இதுபற்றி தந்தை லெட்சு மணன் மகனை கண்டித்துள்ளார். ஆனால் அவர் பேச்சையும் கேட்காமல் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதையடுத்து நேற்றிரவு மீண்டும் லெட்சுமணன் தனது மகனை இப்படி வேலைக்கு செல்லாமல் எத்தனை நாள் தான் இருப்பாய் என்று கூறி கண்டித்துள்ளார். இதனால் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வெற்றிவேல் தனது தந்தை என்று கூட பார்க்காமல் லெட்சுமணணை கீழே தள்ளி விட்டு கல்லால் தாக்கியுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு லெட்சுமணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து தந்தையை தாக்கி கொலை செய்ததாக வெற்றிவேலை கைது செய்தனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தையை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.