உள்ளூர் செய்திகள்
புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதி
திருமங்கலம் நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திருமங்கலம்
திருமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்குகள் ராஜபாளையம் ரோடு பிரிவு மற்றும் உசிலம்பட்டி ரோட்டில் எரிவாயு தகனமேடை அருகே ஆகிய 2 இடங்களில் அமைந்துள்ளன. நகர் முழுவதும் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்புரவு பணியாளர்களால் பெறப்படும் குப்பைகழிவுகள் இங்கு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம்பிரிக்கப்பட்டு வருகிறது.
பிரித்தெடுக்கப்படும் மக்கும் குப்பைகள் உரம் தயாரிப்பதற்காக பயன் படுகிறது. மக்காத குப்பைகளை அங்கிருந்து அப்புறப் படுத்தாமல் குவித்து வருகின்றனர். இதனால் கிடங்கு பகுதியில் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அவ்வப்போது குப்பைகளை தீவைத்து எரிப்பது வழக்கம்.
உசிலம்பட்டி ரோட்டில் உள்ள குப்பை கிடங்கில் நேற்று மாலை பணி முடிந்து சென்ற ஊழியர்கள் வெளி யில் குப்பைகிடங்கு பகுதியில் தீயை பற்றவைத்து சென்றுள்ளனர். தீ மளமளவென குப்பை கிடங்கிற்கு பரவியது. குப்பைகள் பற்றி எரியத்தொடங்கவே அதிகளவில் தீ எரிந்தது. இதனால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதன் அருகே உள்ள தமிழ்தாய்நகர், மின் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கரும்புகை யால் அவதிக் குள்ளாகினர்.
இந்த குப்பைகிடங்கையொட்டி மதுரை-நெல்லை செல்லும் 4 வழிச்சாலை செல்வதால் வாகனத்தில் செல்வோரும் இரவு நேரத்தில் புகையால் அவதிப்பட்டனர்.
இது குறித்து இந்த பகுதியில் குடியிருக்கும் பொது மக்கள் கூறுகையில் குப்பைகிடங்கில் அடிக்கடி தீ பிடித்து எரிகிறது. குப்பை களை அகற்ற வேண்டிய ஊழியர்களே தீயை வைத்து சென்று விடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் மாசு அடைவதுடன் குடியிருப்பு பகுதிகளில் வசிப்போர் சிரமத்திற்குள்ளாகி வருகி றோம். நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.