உள்ளூர் செய்திகள்
வண்ணார்பேட்டை பகுதியில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்ற காட்சி.

நாளை தூய்மை பணியையொட்டி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள்

Published On 2022-04-22 09:55 GMT   |   Update On 2022-04-22 09:55 GMT
நெல்லை மாவட்டம் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் நாளை தூய்மை பணி நடைபெறுகிறது. இதையொட்டி தாமிரபரணி நதிக்கரையோரத்தில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை மாவட்டம் முழுவதும் தாமிரபரணி ஆற்றில் நாளை (சனிக்கிழமை) மெகா தூய்மைப் பணி நடைபெறுகிறது. இதையொட்டி இன்று மாநகராட்சி சார்பில் தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் தூய்மை பணிக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வண்ணார்பேட்டை மணிமேகலை தெரு வழியாக தாமிரபரணி ஆற்றுக்கு செல்லும் பாதையில் இன்று கவுன்சிலர் கந்தன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் சிவசுப்பிரமணியன், தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ ஆகியோர் முன்னிலையில் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக கரையோரத்தில் உள்ள வழிப்பாதைகள் சுத்தப்படுத்தப்பட்டது.

நாளை கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் அதிகளவில் பங்கேற்க உள்ளதால் அந்த பகுதியில் உள்ள குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக தாமிரபரணி நதி நீரை பயன்படுத்தி துணிகளை துவைக்கும் சலவை தொழிலாளிகள் கூறுகையில், இந்த தூய்மை பணி திட்டம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நதிக்கரைக்கு செல்லும் வழி முட்புதர்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தது.

இதனால் எங்களுக்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டோம். எங்களது சொந்த முயற்சியில் அவ்வப்போது இந்த வழி பாதைகளை சீரமைத்து வந்துள்ளோம். தற்போது மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த புதிய முயற்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.
Tags:    

Similar News