உள்ளூர் செய்திகள்
பரமத்தி பகுதியில் தொடர் மின்தடையால் விவசாயிகள், பொதுமக்கள் அவதி
பரமத்தி பகுதியில் தொடர் மின்தடையால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிப்படைந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்திற்கு உட்பட்ட வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, நல்லூர், சோழசிராமணி, எஸ்.வாழவந்தி மற்றும் வில்லிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் துணை மின் நிலைய கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து அடிக்கடி அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று பயின்று வருகின்றனர்.
தற்போது பொதுத்தேர்வு நெருங்கி வருவதாலும்,கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதாவும், மாணவ, மாணவிகள், வர்த்தக நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நோயாளிகள், குழந்தைகள், விவசாயிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து அவ்வப்போது மின்தடை ஏற்பட்டு வருகிறது.
சில நேரங்களில் 2 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வருவதில்லை. அரை மணி நேரத்திற்கு ஒரு முறை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பயிரிட்டுள்ள பணப் பயிர்களுக்கு தண்ணீர் விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவ்வப்பொழுது மின்சாரம் நிறுத்தப்பட்டு வழங்கப்படுவதால் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அதேபோல் பால் நிறுவனங்கள் தங்களது பால் பொருட்களை விற்பனை செய்ய குளிர்சாதனப்பெட்டியில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் பால் பொருட்கள் வீணாகி வருகிறது. தொடர்ந்து பால் விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதேபோல் கணினி சென்டர்கள், இ-சேவை மையங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் மின்தடையால் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் விவசாயிகள், பொதுமக்கள், மாணவமாணவிகள், வணிக நிறுவனங்கள், சேவை மையங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக மின்சார வாரியம் விரைந்து நடவடிக்கை எடுத்து அடிக்கடி மின்வெட்டு வருவதை தவிர்க்க வேண்டும்.
எனவே அனைவரது நலனை கவனத்தில் கொண்டு மின்சார வாரியம் மின்தடை ஏற்படுவதை தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும், பொதுமக்களும், வணிகர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.