உள்ளூர் செய்திகள்
தேங்காய் பூ வாங்க ஆர்வமுடன் வந்த பொதுமக்கள்.

திண்டுக்கல்லில் தேங்காய் பூ விற்பனை அமோகம்

Published On 2022-04-22 13:15 IST   |   Update On 2022-04-22 13:15:00 IST
திண்டுக்கல்லில் தேங்காய் பூ விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல்:

பொதுவாக தென்னை, பனை, வாழை போன்ற மரங்களில் இருந்து அனைத்து பொருட்களும் மக்களுக்கு பயனளிக்கும் பொருளாக உள்ளது. உணவுக்காக மட்டுமின்றி மருத்துவக்குணம் கொண்டதாகவும் இப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நவீன பாஸ்புட் உணவு முறை பழக்கத்தில் இவை மக்களிடம் மறந்து வருகிறது.

ஆனால் கிராமப்பு-றங்களில் இதுபோன்ற பாரம்பரிய உணவு முறைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பொருளாக தேங்காய் பூ விற்பனை திண்டுக்கல்லில் பல இடங்களில் விற்பனையாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தென்னங்கன்று எனப்படும் தேங்காய் செடியில் இருந்து அது முளைக்கும் தருவாயில் வெளியில் எடுத்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். பின்னர் அதனை உடைத்து உள்ளே உள்ள பந்து போன்ற மிருதுவான பொருளை உண்பதற்காக தருகின்றனர்.

இது பூப்போல இருப்பதால் தேங்காய் பூ என்று விற்பனை செய்யப்படுகிறது. இதனை உண்பதன் மூலம் சர்க்கரை, தைராய்டு, அல்சர், ரத்தசோகை, வாய்ப்புண், வயிற்றுப்புண், சிறுநீரக கற்கள், ரத்த அழுத்தம், தோல் சம்மந்தமான வியாதிகள் குணமடைவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த பொருளை பூஜைக்கும் பயன்படுத்துகின்றனர். சித்த மருத்துவத்தில் இதன் உண்மை அறிந்த பலர் இதனை  தங்கள் வீடுகளுக்கு மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். இதுகுறித்து விற்பனையாளர் வெற்றிவேல் தெரிவிக்கையில், தென்னை மரத்தில் இருந்து எடுக்கப்படும் நீராபானம் மருத்துவக் குணம் கொண்டது என நிரூபித்த பிறகு இதனை பெரும்பாலானோர் வாங்கி அருந்த தொடங்கினர்.

இதேபோல் தற்போது தேங்காய் பூ பலவித மருத்துவ குணங்கள் கொண்டது என நிரூபிக்கப்பட்ட பிறகு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திருமணம் முடித்த பல்வேறு விஷேச வீடுகளுக்கும் இதனை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.
 
பொள்ளாச்சியில் இருந்து இதனை நாங்கள் வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். பல திருமண வீடுகளிலும், வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் தற்போது இயற்கை பானங்களை வழங்குவது அதிகரித்துள்ளது. அதில் இளநீர், நீராபானம், நுங்கு, கொய்யா, தேங்காய் பூ உள்ளிட்ட பொருட்களும் இடம் பெறுவதால் விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டித்தரும் நிலையில் உள்ளது.

உழவர் சந்தைகளில் இதனை விற்க அனுமதி அளித்தால் மக்களிடம் இதனை அதிக அளவு கொண்டு செல்லமுடியும் என்றார்.

Similar News