உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

Published On 2022-04-22 13:08 IST   |   Update On 2022-04-22 13:08:00 IST
அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கரூர்:

அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா? என்பதை மாதந்தோறும் கண்டறியவேண்டும் என மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் அறிவுறுத்தியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1,052 அங்கன்வாடி  மையங்கள் உள்ளன. இதில் 787 முதன்மை மையங்கள், 285 குறு மையங்கள் உள்ளன.  இம்மையங்களில் 57,950 குழந்தைகளுக்கு சத்துணவுடன் கூடிய முன்பருவக்கல்வி அளிக்கப்பட்டு  வருகிறது.

மேலும், இக்குழந்தைகளுக்கு மாதம் ஒரு முறை வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை  கணக்கிடப்படுகிறது. இதில் சத்து மற்றும் எடை குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு மருத்துவக்குழுவிற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.
 
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாசி, மாயனூர் ஊராட்சிகள், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி கோவக்குளம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் கலெக்டர் த.பிரபுசங்கர்,  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது வருகைப் பதிவேட்டின்படி, குழந்தைகள் எண்ணிக்கை உள்ளதா? குழந்தைகளுக்கு  வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார். மேலும்  மாதந்தோறும் குழந்தைகளுக்கு உயரம் மற்றும் எடை எடுக்கப்பட்ட விபர பதிவேட்டிலிலுள்ளபடி  இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா? என்பதையும் ஆய்வு செய்து, குழந்தைகள் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை உள்ளதா? என்பதை மாதந்தோறும் கண்டறியவேண்டும் என அறிவுறுத்தினார்.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முன்பருவக்கல்வி குறித்து குழந்தைகளிடம் கேட்டறிந்தார். பின்னர், கட்டிடத்தின் உட்கட்டமைப்பு, பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் குறித்து வட்டார வளர்ச்சி  அலுவலரிடம் கேட்டறிந்தார். மாவட்ட குழந்தை வளர்ச்சி அலுவலர் நாகலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், கிருஷ்ணராயபுரம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் குறள்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News