உள்ளூர் செய்திகள்
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 71 லட்சம் வருவாய்

Published On 2022-04-22 09:21 IST   |   Update On 2022-04-22 09:21:00 IST
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரத்து 310 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 111 செலுத்தப்பட்டிருந்தது.
பழனி:

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக கோவிலில் உள்ள உண்டியல்களில் செலுத்துகின்றனர்.

இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன் அதில் உள்ள பணம், பொருட்கள் கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த மாதம் 25-ந்தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.

அதன்பின்னர் 27 நாட்களுக்கு பிறகு, பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. கார்த்திகை மண்டபத்தில் நடந்த இந்த பணிக்கு பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார், திருப்பூர் வாழைத்தோட்டம் அய்யன்கோவில் உதவி ஆணையர் மேனகா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இந்த பணியில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி மாணவ-மாணவிகள் என 150-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 71 லட்சத்து 95 ஆயிரத்து 310 வருவாயாக கிடைத்தது. மேலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 111 செலுத்தப்பட்டிருந்தது.

இதைத்தவிர தங்கம் மற்றும் வெள்ளியாலான வேல், சங்கிலி, கைவிலங்கு, மோதிரம், பாதம், மயில், தொட்டில் உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1,039 கிராம், வெள்ளி 15 கிலோ (15,083 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, 2-வது நாளாக இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Similar News