உள்ளூர் செய்திகள்
அண்ணனை ஈட்டியால் குத்திய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மன்னார்குடி அருகே அண்ணனை ஈட்டியால் குத்தி கொலை செய்த கட்டிட தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலையாமங்கலம் ஏத்தக்குடி கீழகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருடைய அண்ணன் ராஜ்குமார்(46). கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 28-ந் தேதி குடிபோதையில் இருந்த விஜயகுமார் தனது மனைவியிடம் தகராறு செய்தார். இதை அவருடைய அண்ணன் ராஜ்குமார் தட்டிக்கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகுமார் அருகே இருந்த இரும்பு ஈட்டியை எடுத்து தனது அண்ணன், ராஜ்குமாரை குத்திக்கொலை செய்தார்.
இதுகுறித்து தலையாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருவாரூர் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
இதில் அண்ணனை கொலை செய்த விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு கூறினார். அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டணை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் மணிகண்ணன் ஆஜரானார். இதைத்தொடர்ந்து விஜயகுமாரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.