உள்ளூர் செய்திகள்
பால் பண்ணையின் ஒரு பகுதியில் தீ கொழுந்து விட்டு எரியும் காட்சி.

ஆறுமுகநேரியில் பெட்ரோல் ஊற்றி பால் பண்ணைக்கு தீ வைப்பு

Published On 2022-04-20 15:35 IST   |   Update On 2022-04-20 15:35:00 IST
ஆறுமுகநேரியில் பெட்ரோல் ஊற்றி பால் பண்ணைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பாலகுமரேசன் (45). அறக்கட்டளை நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருக்கு சொந்தமான பால் பண்ணை அங்கு உள்ளது. பண்ணை வளாகத்தில் பெரிய அளவிலான 6 மாட்டு தொழுவங்கள் உள்ளன. நேற்று நள்ளிரவு அந்த பால்பண்ணைக்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர்.

நள்ளிரவில் மாட்டுத் தொழுவம் தீப்பிடித்து எரிந்தது பற்றி திருச்செந்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென்ற தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கை காரணமாக தீ மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது.

இதனால் கன்றுகள் உள்ளிட்ட சுமார் 60 மாடுகள் உயிர் தப்பின. அருகில் இருந்த மாட்டு தொழுவங்களுக்கும், வைக்கோல் படப்புக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. எனினும் தொழுவத்தின் ஒருபகுதி முழுவதுமாக எரிந்து சாம்பலானது. தீயில் கருகிய தொழுவத்தின் சேத மதிப்பு ரூ. 1.50 லட்சம் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி பாலகுமரேசன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்துள்ளார். விசாரணையில் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது கும்பலாக வந்த சிலரில் ஒரு நபர் பால் பண்ணையின் கூரையில் பெட்ரோல் பாக்கெட்டுகளை வீசி தீ வைத்துவிட்டு செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Similar News