உள்ளூர் செய்திகள்
கைது

போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது

Published On 2022-04-20 06:44 GMT   |   Update On 2022-04-20 06:44 GMT
போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்து கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

தமிழகம் முழுவதும் கஞ்சா,குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனையை தடுக்க ஆபரே‌ஷன் கஞ்சா 2.0 என்ற பெயரில் தீவிர சோதனை நடந்து வருகிறது.

இதையடுத்து தினந்தோறும் கஞ்சா விற்பனை மற்றும் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் சிக்கி வருகிறார்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் போரூர் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி கஞ்சா விற்ற 2 கல்லூரிமாணவர்கள் சிக்கி உள்ளனர். போரூர் அடுத்த அய்யப்பந்தாங்கல் பகுதியில் நேற்று மாலை போரூர் இன்ஸ்பெக்டர் ரவிகுமார், சப் - இன்ஸ்பெக்டர் பிரதீப் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கி சோதனை செய்தனர்.

அவர்களது பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த சந்தீப் மற்றும் சென்னை பாடியை சேர்ந்த கவுசிக் என்பது தெரியவந்தது.

அவர்கள் இருவரும் ராமாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் இறுதியாண்டு படித்து வருகின்றனர். சந்தீப் கல்லூரி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உடன் படித்து வரும் நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவருக்கு பிறந்தநாள் ஆகும். இதை முன்னிட்டு தனது நண்பர்களுக்கு மது விருந்துடன் கஞ்சா பார்ட்டி கொடுப்பதற்காக கஞ்சா வாங்கி வந்தபோது போலீசிடம் வசமாக சிக்கிக் கொண்டது விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து மாணவர்கள் சந்தீப், கவுசிக் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் யாரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்தனர் ? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திரா மாநிலத்தில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வருவதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் பொன்பாடி சோதனைச் சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகபடும்படி வந்துக்கொண்டிருந்த திருத்தணி ஜோதிநகர் பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார்(23), சென்னை வியாசர்பாடியை சேர்ந்த நிதிஷ்(19), திருத்தணி டேங்க் தெருவை சேர்ந்த சக்கரை செல்வம்(19) ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.அப்போது பையில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா கடத்தி வந்த சஞ்சய்குமார் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News