உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர்கள் உதவித்தொகையுடன் தொழில்நுட்ப பயிற்சி பெற வாய்ப்பு

Published On 2022-04-18 16:47 IST   |   Update On 2022-04-18 16:47:00 IST
தகுதியுடைய நபர்கள் வருகிற 20ஆம் தேதி பகல் 12 மணிக்குள் www.nimionlineadmission.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த இளைஞர்கள் உதவித் தொகையுடன் தகவல் தொழில் நுட்பம், நெட்வொர்க்கிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் 2 ஆண்டுகள் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம், பயிற்சி பிரிவு மண்டல இயக்ககம், ஐ.பி.எம். நிறுவனம் ஆகியவை இணைந்து உதவித் தொகையுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட தகவல் தொழில்நுட்பம், நெட்வொர்க்கிங் மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் 2 ஆண்டுகள் பயிற்சியை அளிக்கவுள்ளன.

தேசிய அளவிலான இந்தப் பயிற்சியில் சேர்வதற்கு பிளஸ் 2 (60 சதவீத மதிப்பெண்கள்), அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (60 சதவீத மதிப்பெண்கள்) பெற்றிருக்க வேண்டும். தகுதியுடைய நபர்கள் வருகிற 20ஆம் தேதி பகல் 12 மணிக்குள் www.nimionlineadmission.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இந்தப் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியுடைய நபர்கள் அனைவருக்கும் ஐ.பி.எம். நிறுவனத்தின் சார்பில் உதவித் தொகை வழங்கப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9448105633 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Similar News