அம்மாபேட்டை அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
அம்மாபேட்டை:
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம் பட்லூர் ஊராட்சி சொக்கநாதமலையூர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக வெள்ளித் திருப்பூர்-சென்னம்பட்டி செல்லும் வழியில் பைப்லைன் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதனால் அந்த பகுதி மக்களுக்கு கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. மேலும் சில நேரங்களில் குடிநீர் கலங்கலாக வந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென இன்று காலை சொக்கநாத மலையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார், பட்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கூறி தண்ணீர் சீரான முறையில் வினியோகிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் ஒலகடம்- வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.