உள்ளூர் செய்திகள்
தனித்தனி விபத்தில் 2 பேர் காயம்
புதுவையில் தனித்தனி விபத்தில் 2 பேர் காயமடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை மூர்த்திக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்தீபன். இவரது மனைவி ஜெயகாந்தா(வயது53). இவர் புதுவை உழவர்சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று ஜெயகாந்தா ஒரு தட்டுவண்டியில் காய் கறிகளை ஏற்றிக்கொண்டு அந்த வண்டியிலேயே அமர்ந்து உழவர் சந்தைக்கு வந்து கொண்டிருந்தார்.
அண்ணாசாலையில் வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென தட்டு வண்டியில் மீது மோதினார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஜெயகாந்தா காலில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஜெயகாந்தாவை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜெயகாந்தா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் திருமானிகுயில் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது30). சம்பவத்தன்று இவர் தனது மனைவி ரம்யா கிருஷ்ணன்(27) என்பவருடன் புதுவையில் இருந்து கடலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
புதுவை&கடலூர் மெயின் ரோடு பூரணாங்குப்பம் சந்திப்பில் வந்த போது திடீரென சாலை தடுப்பு கட்டையில் கார் மோதியது.
இதில் ரம்யா கிருஷ்ண னுக்கு இடது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிகிச்சைக்காக அதே காரில் அவரது கணவர் பாக்யராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக கடலூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் ரம்யா கிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்கு வரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.