உள்ளூர் செய்திகள்
தலித் பழங்குடியின கூட்டமைப்பினர் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட காட்சி.

புதுவை சட்டசபையை முற்றுகையிட்ட தலித் பழங்குடியின கூட்டமைப்பினர்- போலீசாருடன் மோதல்

Update: 2022-03-11 11:09 GMT
சிறப்புக்கூறு நிதியை செலவிடாததை கண்டித்து தலித் பழங்குடியின கூட்டமைப்பினர் புதுவை சட்டசபையை முற்றுகையிட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:

சிறப்பு கூறு நிதியை செலவிடாததை கண்டித்து புதுவை தலித் மற்றும் பழங்குடி இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் சட்டசபையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்காக இன்று காலை அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சட்டசபை நோக்கி வந்தனர்.

ஊர்வலம் மற்றும் போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் நீலகங்காதரன் தலைமை வகித்தார். தலித் உரிமை இயக்க தேசிய தலைவர் ராமமூர்த்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச்செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தனர்.

ஊர்வலமாக வந்த போராட்ட குழுவினரை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு போலீசார் தடுப்புகளை மீறி சட்டசபை நோக்கி செல்ல முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போராட்ட குழுவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பேரிகார்டுகளின் மீது ஏறி சட்டமன்றம் நோக்கி ஓடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.

இருப்பினும் சிலர் சட்டமன்ற நுழைவு வாயிலுக்கு சென்றனர். சட்டமன்ற காவலர்கள் நுழைவு வாயில் கதவை மூடினர். அங்கு தரையில் அமர்ந்த போராட்ட குழுவினர் கோ‌ஷம் எழுப்பினர்.

இதையடுத்து அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

எஸ்.சி., எஸ்.டி. சிறப்புக்கூறு துணைத்திட்ட நிதியை புதுவை அரசு முழுமையாக செலவிட வேண்டும்.

சென்டாக்கில் தேர்வான மாணவர்களுக்கு மட்டும் ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என பாரபட்சம் காட்டக்கூடாது. சிறப்புக் கூறு நிதியை முழுமையாக செலவிடாத அதிகாரி மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், இதை செயல்படுத்தாத புதுவை அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

போராட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் பிரகாஷ், ராஜா, புண்ணியக் கோடி, எழிலன், சேகர், ராமன், ஏகாம்பரம், அரிகிருஷ்ணன், கண்ணதாசன், லெனின், கங்காதரன், சரவணன், நாகமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News