உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்க அழைப்பு

Published On 2022-02-25 14:59 IST   |   Update On 2022-02-25 14:59:00 IST
ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெற்றி சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவி ஏற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெற்றி சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 769 கவுன்சிலர் பதவிக்கு 2,722 பேர் போட்டியிட்டு 769 பேர் கடந்த 22-ந் தேதி தேர்வு செய்யப்பட்டு, வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் பெற்று சென்றனர்.

இவர்கள் அனைவரும், அவரவர் சார்ந்த உள்ளாட்சி அமைப்பில் வரும் மார்ச் மாதம் 2-ந் தேதி காலை 9:30 மணிக்கு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவியேற்கின்றனர். 

ஈரோடு மாநகராட்சியில் மட்டும் மாநகராட்சி ஆணையர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் பதவியேற்கின்றனர். 

வெற்றி பெற்றமைக்கான சான்றிதழ் வழங்கியபோதே வரும், 2-ந் தேதி பதவியேற்பில் பங்கேற்பதற்கான அழைப்பாணையும் வழங்கப்பட்டுவிட்டது.

இதற்கிடையில் வரும் 4-ந் தேதி ஈரோடு மாநகராட்சிக்கு ஒரு மேயர், ஒரு துணை மேயர், 4 நகராட்சியில் தலா ஒரு தலைவர், ஒரு துணை தலைவர், 42 பேரூரா ட்சிகளில் தலா 42 தலைவர், 42 துணை தலைவர் என 94 பதவிக்கானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

மேயர் மற்றும் தலைவர் தேர்வு காலை 9.30 மணிக்கும், துணை மேயர் மற்றும் துணை தலைவர் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் நடக்க உள்ளது.

தற்போது தேர்வு செய்யப் பட்ட கவுன்சிலர்களில் உள்ள நபர்களே இப்பதவிக்கு தேர்வு செய்யப் படுகின்றனர். 

இதனால், 2-ந் தேதி பதவியேற்று கொண்டவர்கள் மட்டுமே, அத்தேர்வில் பங்கேற்கலாம். ஒரு வேளை அன்றைய தேதியில் கொரோனா உள்ளிட்ட காரணத்தால் பதவியேற்க தவறி இருந்தால் 4-ந் தேதி காலை தலைவர், துணை தலைவர் தேர்வு முன் பதவியேற்று, பங்கேற்கலாம்.

மேயர், துணை மேயர் மற்றும் தலைவர், துணை தலைவர் பதவிக்கு ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்தால் அவரே தேர்வு செய்யப்படுவர். 

கூடுதலான நபர்கள் மனுத்தாக்கல் செய்தால், தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டு, அன்றே பதவியேற்பார்கள். 

இதற்கும் அந்தந்த பகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நேற்று முதல் அழைப்பாணை வழங்கி வருகிறார். 

இம்மறைமுக தேர்தலுக்கு தேர்தல் கட்டணம் ஏதுமில்லை. மாநகராட்சியில் மட்டும் கூடுதலாக, மண்டல தலை வர்கள் நியமிக்கப்படுவர்.

எனவே வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் வெற்றி சான்றிதழுடன் பதவி ஏற்க வர கேட்டுக் கொண்டு உள்ளனர்.

Similar News