உள்ளூர் செய்திகள்
மார்க்கெட் கமிட்டிக்கு நெல்வரத்து அதிகரிப்பு
மார்க்கெட் கமிட்டிக்கு நெல்வரத்து அதிகரித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 2018-ல் மத்திய அரசின் இ-நாம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது.
விவசாயிகள் கொண்டு வரும் விளைபொருட்களை, இ-லாட் முறையில் உத்தேச மதிப்பில் இ-நாம் போர்ட்டலில் பதிவிடப்படும். 10.30 மணிக்குள் வியாபாரிகள் நெல் உள்பட விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்கின்றனர்.
அதிகபட்ச விலை நிர்ண யிக்கும், வியாபாரிக்கு விளை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. எலக்ட்ரானிக் மிஷின் மூலம் எடை போடுவதால், ஒரு மூட்டைக்கு 3 முதல் 5 கிலோ வரை இழப்பும் தவிர்க்கப்படுகிறது. மத்திய அரசு நிர்ணயித்துள்ள விலையை விட கூடுதல் விலை கிடைக்கிறது. இதனால் புதுவை, தமிழக பகுதிகளான மரக்காணம், திண்டிவனம் பகுதி விவசாயிகளும் தட்டாஞ்சாவடி கமிட்டிக்கு விளை பொருட்களை கொண்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு சம்பா பட்டத்தில் 6 ஆயிரத்து 100 குவிண்டால் நெல் வந்தது. இந்தாண்டு 8 ஆயிரத்து 171 குவிண்டால் நெல் வந்துள்ளது. சம்பா அறுவடை மார்ச் மாதம் வரை நீடிக்கும் என்பதால் 10 ஆயிரம் குவிண்டால் நெல் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக வெள்ளை பொன்னி குவிண்டால் ரூ.2 ஆயிரத்து 106, பபட்லா ரூ.ஆயிரத்து 921, பொன்மணி ரூ.ஆயிரத்து 66-க்கு விலை போனது.