உள்ளூர் செய்திகள்
முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் ரத்ததான முகாம் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முகாமிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக முத்து ரத்தின அரங்கம் மேல் நிலைப்பள்ளியும் ஜிப்மர் ரத்த வங்கியும் இணைந்து ரத்த தான முகாமை நடத்தியது. தலைமை விருந்தினராக மாநில அளவிலான நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தினராக ஜிப்மர் ரத்த வங்கியின் பொறுப்பாளர் டாக்டர் வடிவேல் கலந்து கொண்டு ரத்ததானம் செய்வதின் அவசியத்தை மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.
புதுவை மாநில ஒருங்கிணைந்த கோஜூரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார். ரத்ததான முகாமில் பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். ரத்ததானம் செய்த அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் நெடுஞ்செழியன் மற்றும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர்.