உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

தாய் மொழிப்பற்றை வீட்டில் இருந்து தொடங்குவோம்- கவர்னர் தமிழிசை அழைப்பு

Published On 2022-02-22 09:30 IST   |   Update On 2022-02-22 09:30:00 IST
தாய் மொழிப்பற்றை வீட்டில் இருந்து தொடங்குவோம் என்று கவர்னர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

உலகத் தாய்மொழி நாளை கொண்டாடும் வகையில் “தாய் மொழி போற்றுதும்“ என்ற தலைப்பில் புதுவை தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்கினை கவர்னர்  தமிழிசை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தாய்மொழி தமிழ் பற்றி பேசும் அளவிற்கு அதன் வளர்ச்சிக்காக நாம் பணியாற்றுகிறோமா என்பது சந்தேகம். தாய் மொழியை நேசிக்கும் அதேவேளை பிற மொழிகளை நிந்திக்கக்கூடாது. எத்தனை மொழிகளை படிக்கிறோமோ அந்த அளவிற்கு நமது அறிவாற்றலும் வாய்ப்புகளும் அதிகரிக்கிறது. 

தாய்ப்பால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு அணுக்களை  அதிகரிக்கிறதோ அதேபோல தாய் மொழி நம் கற்கும் திறனை அதிகரிக்கிறது. குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்து தாய் மொழியை கற்றுக் கொடுக்க வேண்டும். தாய் மொழியில் கற்றவர்கள்தான் உலக அளவில் சாதனை செய்திருக்கிறார்கள். 

பிரதமர் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய கல்வி கொள்கை மற்றொரு மொழியைக் கற்றுக்கொண்டாலும் தொடக்க கல்வி தாய்மொழியில் தான் இருக்க வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. தாய்மொழி பற்றை வீட்டில் இருந்து தொடங்குவோம். குழந்தைகளுக்கு தமிழ் பெயர் சூட்டுவோம். 

இவ்வாறு கவர்னர் தமிழிசை  பேசினார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மோகன், பேராசிரியர்கள், தமிழ் சங்க பிரதிநிதிகள், மாணவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Similar News