உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கக் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வியாபாரிகள் பொருட்களை வாங்கக் கூடாது

Published On 2022-02-14 15:37 IST   |   Update On 2022-02-14 15:37:00 IST
கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வியாபாரிகள் பொருட்களை வாங்கக் கூடாது என குடியாத்தத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.
குடியாத்தம்:

தமிழ்நாட்டில் சிறு வணிகர்கள், மளிகை கடைகள், கிராமப்பகுதியில் உள்ள வியாபாரிகள் நகர்ப்புரங்களில் உள்ள நுகர்பொருள் விநியோகஸ்தர்களிடம் இருந்து கடைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் மொத்தமாக வாங்கி விற்பனை செய்வார்கள்.

இதனால் மொத்த வியாபாரிகளும் அதனை நம்பியுள்ள லட்சக்கணக்கான குடும்பங்கள் பயன் பெற்று வந்தன.

தற்போது இந்த பொருட்களை விற்பனை செய்யும் துறையில் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்துள்ளதால் மொத்த வியாபாரிகள் மற்றும் அதனை நம்பி உள்ளவர்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் குடியாத்தம் நகரில் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அவசரக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு குடியாத்தம் நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பி.மோகன்பாபு தலைமை தாங்கினார்.வியாபாரிகள் சங்கங்களின் கௌரவ தலைவர் எஸ்.நடராஜன் மளிகை வியாபாரிகள் சங்க தலைவர் பி.ரமேஷ்பாபு, நிர்வாகி கே.தயாளமூர்த்தி, பேர்ணாம்பட்டு நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கத்தலைவர் வி.பிரசாத், செயலாளர் வி.பாஸ்கர் அனைத்து பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ஜெ.அறிவுடைநம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் குடியாத்தம் மற்றும் பேர்ணாம்பட்டு சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள அனைத்து வணிகர்களிடம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் சார்பாக அனைத்து வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குமாறு வற்புறுத்துகின்றனர். 

இதனால் இப்பகுதி மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதி வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் பேர் தமிழகத்தில் மட்டும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

 எனவே அனைத்து வியாபாரிகளும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்வதில்லை என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முடிவில் குடியாத்தம் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்க செயலாளர் வி.அருள் நன்றி கூறினார். 

இக்கூட்டத்தில் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News