உள்ளூர் செய்திகள்
வேலூர் மாவட்டத்தில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு
வேலூர் மாவட்டத்தில் வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
வேலூர்:
குடியரசு தினவிழாவில் இந்திய விடுதலை போரில் பங்குபெற்ற வீரர்களின் பெருமைகளை போற்றும் வகையில் 3 அலங்கார ஊர்திகளை மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அந்த வாகனம் தமிழகம் முழுவதும் சுற்றி வருகிறது.
வேலூர் மாவட்டத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி வருகை தந்தது. வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட காட்சி, வீரன் சுந்தரலிங்கம், வீரத்தாய் குயிலி, பூலித்தேவன், ஒண்டிவீரன், வீரன் அழகு முத்துக்கோன், காளையர் கோயில், கோட்டையின் மீது வீரர்கள் ஆங்கிலேயரிடம் சண்டையிடும் காட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளது.
வேலூர் மாவட்ட எல்லையான கூத்தம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அலங்கார ஊர்தியினை மலர்தூவி வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியம் கழனிபாக்கம் ஊராட்சியில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி நிலைநிறுத்தப்பட்டது. அதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.